க்களிடையே பக்தி உணர்வு வளர திரைப்படங்கள் பெரும்பங்காற்றியுள்ளன. பல இறையடியார்களின் வரலாறை பாமரரும் அறியச்செய்த பெருமை திரைப்படங்களுக்கு உண்டு. அத்தகைய இறையடியார்களில் ஒருவர் பொய்யாமொழிப் புலவர்.

Advertisment

முருகனுக்கு தமிழ்மொழியின்மீது அளவற்ற காதல். அடியார்களை வலிந்து ஆட்கொண்டு தன்னைப் பாடச்செய்து கேட்டு மகிழ்ந்த வன். ஔவையார், அருணகிரிநாதர், குமரகுருபரர் என்று பலரை உதாரணமாகச் சொல்லலாம். அப்படி முருகப் பெருமானால் ஆட்கொள்ளப்பட்டவரே பொய்யா மொழிப் புலவர். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர்.

ஒருமுறை சாண்டோ சின்னப்பா தேவர், ""கலைஞானம்... எம்.ஜி.ஆரை வச்சு நிறைய படங்கள் எடுத்துட்டேன். இப்போ அவர் முதலமைச்சராகிட்டார். சிவாஜியை வச்சு ஒரு படம் எடுக்கலாம்னு யோசிக்கிறேன். ஒரு முருகன் கதை இருந்தா சொல்லு'' என்றார். உடனே மனதில் பொய்யாமொழிப் புலவரின் வரலாறு நினைவுக்கு வந்தது.

""அண்ணே... ஒரு புலவர் முருகனைப் பாடவே மாட்டேன்னு சொன்னார்...'' என்றேன்.

Advertisment

""என்னது... முருகனைப் பாடவே மாட்டேன்னு சொன்னானா? அந்த மடப்புலவன் யாரு?'' என்று கோபமாகக் கேட்டார்.

""பொறுமையா கேளுங்க...'' என்று சொல்லி பொய்யாமொழிப் புலவரின் கதையைக் கூறத் தொடங்கினேன்.

காளிதேவியின் தீவிர பக்தர் பொய்யா மொழிப் புலவர். தேவியின் அருளால்தான் அவர் கவிபுனையும் வல்லமை பெற்றார். தேவியே அவருக்கு "சிவகவி' எனும் பெயரையும் சூட்டினாள். பல தலங்களுக்கும் சென்று அம்மையப்பரைப் பாடி மகிழ்ந்தார். ஆனால் வேறு எந்த தெய்வத்தையும் பாடுவதில்லை என்று உறுதியுடன் இருந்தார். குறிப்பாக முருகனைப் பாடுவதில்லை என்பதில் வெகு உறுதிகொண்டிருந்தார். அவர் வாக்கு அப்படியே பலித்ததால் அவருக்கு "பொய்யாமொழிப் புலவர்' என்று பெயரும் அமைந்தது. அப்போது ஒருசமயம் அந்த நாட்டு மன்னனின் மகள் அமிர்தவல்லி, அம்மை நோய் கண்டு அவதியுற்றாள். அங்கு சென்ற புலவர் அகிலாண் டேஸ்வரியைத் துதித்துப்பாட, அம்மை நோய் இறங்கிவிட்டது. அதைக்கண்டு மகிழ்ந்த மன்னன் தன் மகளைப் புலவருக்கே மணம்செய்து கொடுத்ததோடு, சீர்வரிசைகளையும் சிறப் பாகக் கொடுத்து வழியனுப்பி வைத்தான்.

Advertisment

இரக்க சுபாவமுள்ள பொய்யாமொழிப் புலவர் பிறருக்கு அளவுக்கு மீறி உதவி செய்ததால், மாமனார் கொடுத்த செல்வங்களெல்லாம் வேகமாகக் கரையத் தொடங்கின. ஒரு கட்டத்தில் வறுமை அவர் வீட்டில் குடியேறி யது. மன்னன் மகள் சோகமானாள்.

இந்த நிலையில் முருகன் புலவரை ஆட்கொள்ள முனைந்தான். வள்ளியை ஆட்கொள்ள கிழவன் வேடத்தில் சென்றது போல, நெற்றி நிறைய நீறுபூசி ஒரு வயதான அடியார் உருவில் புலவர் வீட்டுக்குச் சென்றான். வாசலில் நின்று அழைக்க, புலவர் வெளியே வந்தார்.

""அய்யா புலவரே... உம்மை பொய்யா மொழிப் புலவர் என்று ஊரெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். என் அப்பன் முருகனைப் பற்றி ஒரு பாடல் பாடு.

உனக்கு ஆயிரம் பொற்காசுகள் தருகிறேன்'' என்றான்.

புலவரோ, ""நான் வறுமையில் இருப்பது உண்மைதான். ஆனால் கொள்கையிலிருந்து மாறமாட்டேன். நூறாயிரம் பொற்காசுகள் கொடுத்தாலும் சரி... என் அம்மையப்பனைப் பாடும் வாயால் அந்த ஆண்டி சுப்பனைப் பாடமாட்டேன். கோழியைப் பாடிய வாயால் குஞ்சைப் பாடமாட்டேன்'' என்று உறுதியாகக் கூறினார்.

""என் முருகனையா குஞ்சு என்கிறீர்?'' என்று அடியார் வேடமிட்ட முருகன் கேட்க, ""ஆம். என் தாய் கோழி; முருகன் கோழிக்குஞ்சுதான்'' என்றார்.

""முருகா... இந்தப் புலவனின் அகந்தையை அடக்கமாட்டாயா?'' என்று பொய்க்கோபம் காட்டியபடி, வந்தவேலையை முடித்துக்கொண்டு அங்கிருந்து அகன்றான் முருகன்.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த புலவரின் மனைவி அமிர்த வல்லிக்கு ஆத்திரம் பொங்கியது. அரண்மனை யில் செல்வாக்கோடு வளர்ந்தவளல்லவா? அந்தக் கோபத்தில், ""என் தந்தை கொடுத்த சீர்வரிசை செல்வங்களையும் ஏழை களுக்கு தானம் செய்து மகிழ்ச்சி கண்டீர். இப்போது அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லை. இந்த நிலையில் தேடிவந்த செல்வத்தை திருப்பியனுப்பிவிட்டீரே... ஆயிரம் பொன்னை வாங்கிக்கொண்டு முருகன்மீது ஒரு பாட்டு பாடியிருந்தால் உமது வாயென்ன வெந்தாபோகும்? கர்வம் பிடித்த கவிஞனுக்கு மனைவி ஒரு கேடா!'' என்று குமுறிவிட்டாள்.

murugan

இதை புலவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. "பெரும் செல்வத்தில் வாழ்ந்த கண்ணகி கோவலனின் வறுமையை ஏற்றுக்கொண்டு இன்முகத்துடன் செல்லவில்லையா... எந்த சூழலிலும் கணவனோடு ஒன்றி வாழ்வதுதான் கற்புக்கரசிகளின் பண்பு. ஆனால் இப்படி சுடுசொற்களை அள்ளி வீசிவிட்டாளே' என்று மனமுடைந்த புலவர் காளியை தியானித்து ஒருபாடல் பாடினார். அப்போது ஒரு பை அமிர்த வல்லிமுன் விழுந்தது. அதை எடுத்துப் பார்த்தவளின் முகம் பிரகாசமானது.

பைநிறைய பொற்காசுகள். மிகுந்த மகிழ்ச்சியுடன் கணவனை வீட்டுக்குள் வருமாறு அழைத்தாள்.

""உனக்கு காசுதானே முக்கியம்.

கணவனல்லவே. நான் வருகிறேன்'' என்று உடனே அங்கிருந்து அகன்றார். சிறிது நேரத்தில் அந்தப் பொற்காசுகள் மறைந்துபோக, ""முருகா... தவறு செய்து விட்டேனே'' என்று புலம்பினாள் அமிர்தவல்லி.

தலங்கள்தோறும் சென்று அம்மையப்பரை தரிசித்துப் பாடிப் பரவசப்பட்டார். மதுரைக்குச் சென்று வணங்கினார். அங்கிருந்த புலவர்கள், ""நீங்கள் சங்கப்புலவர்களுக்கு இணையான பொய்யாமொழிப் புலவரென்றால், மூழ்கிவிட்ட சங்கப்பலகையை மிதக்கச் செய்யுங்கள் பார்ப்போம்'' என்றனர்.

"பூவேந்தர் முன்போல் புரப்பார் இலையெனினும்

பாவேந்தர் உண்டென்னும் பான்மையால்- கோவேந்தன்

மாறனறிய மதுராபுரித் தமிழோர்

வீறணையே சற்றே மித'

என்று அவர் பாட சங்கப்பலகை மிதந்ததாம்.

அப்போது அங்கிருந்த பதுமைகள் "பொய்யாமொழி பொய்யாமொழி' என வாழ்த்தினவாம்.

இதைக் கண்ட பாண்டிய மன்னன் புலவருக்கு சிறப்பு கள் செய்து, பொற்காசுகளைப் பரிசாக வழங்கினான்.

அக்காசுகளைத் தன் மனைவியிடம் கொடுக்க ஒரு கானகம் வழியே சென்றார்.

அப்போது முருகன் ஒரு வேடன் வடிவில் அங்கு தோன்றி, ""இந்த காடு எனக்குச் சொந்தமான பகுதி. உன்னிடமுள்ள பொருளைக் கொடுத்துவிட்டு இங்கிருந்து செல்'' என்றான்.

""அய்யா, நானொரு ஏழைப்புலவன். என் மனைவிக்குக் கொடுப்பதற்காக கொண்டு செல்கிறேன். என்னிடம் இருப்பதெல்லாம் தமிழ்தான். தயவுசெய்து என்னைப் போக அனுமதியுங்கள்'' என்றார் புலவர்.

thiyagaraja""பெரிய புலவரா நீர். சரி... வேடனான என்னை பாட்டுடைத் தலைவனாக்கி ஒரு பாட்டு பாடு'' என்றான் வேடன்.

சரி; எதையாவது பாடிவிட்டுப் போவோம் என்று, ""அய்யா உங்கள் பெயர் என்ன?'' என்று கேட்டார்.

""முட்டை'' என்றான் வேடன்.

""இப்படியொரு பெயரா... சரி பாடுகிறேன்'' என்று சொல்லி-

"பொன்போலும் கள்ளிப் பொறிபறக்கும் கானலிலே

என்பேதை செல்லற் கியைந்தாளே- மின்போலும்

மானவேன் முட்டைக்கு மாறாய தெவ்வர்போங்

கானவேன் முட்டைக்கும் காடு'

என்று பாடினார்.

""உம் செய்யுளில் சொற்குற்றம் இல்லை. ஆனால் பொருட்குற்றம் உண்டு'' என்றான் வேடன். கோபமான புலவர் ""உன் வில்லுக்கும், அம்புக்கும் அஞ்சேன். பொருட்குற்றத்தைச் சொன்னால் உமக்கு நான் என்றும் அடிமை'' என்றார்.

""அடிமையாக்கத்தானே வந்தோம். காய்ந்துபோன சதுரக்கள்ளிச்செடிகள் தீப்பற்றிக் காடே எரிகிறது. அந்தக் காட்டுத் தீயில் சிறு நெருப்புக்கும் தாங்காது. வெந்து சாம்பலாகும் வேலமரத்து முள்... பேதையின் காலில் எப்படித் தைக்கும்?''

""ஒரு வேடனா என் கவியில் குற்றம் கண்டது? அய்யா நீங்கள் யார்?''

""இப்போது யாரைப் பற்றிப் பாடினீர்?''

""முட்டையைப் பற்றி.''

""முட்டையிலிருந்து வருவது?''

""குஞ்சு.''

""குஞ்சுக்குத் தாய்?''

""கோழி.''

""கோழியைப் பற்றிபாடும் வாயால் குஞ்சைப்பற்றி பாடமாட்டேன் என்று சொன்ன புலவர் நீதானே?''

""ஆம்.''

""இப்போது குஞ்சைக்கூட பாடாமல் முட்டையைப் பற்றிப் பாடினீரே?''

""அய்யா... நீர் சாதாரணமானவர் இல்லை. யார் என்று சொல்லுங்கள்?''

""உம் தாயின் குஞ்சு'' என வேடன் வேஷம் கலைத்து முருகன் தோன்ற... ""முருகா... உன் பெருமை அறியாமல் பெரும்பிழை செய்துவிட்டேன்'' என திருவடியில் விழுந்த புலவரைத் தொட்டுத் தூக்கி நிறுத்திய முருகன், ""பொய்யாமொழியே, உமது ஆணவத்தை அடக்கி ஆட்கொள்ளவே வந்தோம். யாமே முருகன்.... யாமே சிவன்... யாமே சக்தி... யாமே விஷ்ணு...'' என பல உருவங்கள் காட்டிய முருகன்... ""யாமே சர்வமும்'. உருவம் பலவாகினும் யாம் ஒன்றே. இது உமது புத்திக்குப் புலப்படவில்லை. ஆயினும் உமது வைராக்கியத்தை மெச்சு கிறோம். உமது மொழி என்றும் பொய்யா மொழியாகவே இருக்கட்டும்'' என அருளி மறைந்தான் முருகன்.

இந்தக் கதையை வைத்து, எம்.கே. தியாகராஜ பாகவதர் நடிப்பில் "சிவகவி' என்னும் படம் அந்தக் காலத்திலேயே வெளியானது. இது தேவருக்கும் பிடித்தது. ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை. இதுவும் முருகனின் விருப்பம்போலும்!

(தொடரும்)